Tuesday 21 March 2017


பெரம்பலூர் மந்திரவாதியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித மண்டை ஓடுகள், சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் வீடு எடுத்து தங்கி, மகாகாளி உக்கிர பூஜை நடத்த இளம்பெண் உடலை தோண்டி எடுத்து வைத்திருந்ததாக மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மந்திரவாதி கார்த்திகேயன் (வயது 31), அவரது மனைவி நசீமா (21) உள்பட 6 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். ஆவிகளுடன் பேசுதல் உள்ளிட்டவற்றுக்காக பெண்ணின் உடலை வைத்திருந்ததாகவும், பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறான வேலைகளில் கார்த்திகேயன் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கார்த்திகேயனின் வீட்டில் இருந்து மனித மண்டை ஓடுகள், வசிய மை டப்பாக்கள், சாமி சிலைகள் உள்பட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அரியவகை உயிரினமான கடல்குதிரைகளையும் கைப்பற்றினர். அவ்வாறு கைப்பற்றப்பட்ட 30 கடல்குதிரைகளை வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கோர்ட்டில் ஒப்படைப்பு
இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார், மந்திரவாதி கார்த்திகேயனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு நேற்று கொண்டு வந்தனர். பின்னர் இவ்வழக்கின் ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை கோர்ட்டு பணியாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவற்றை அவர்கள் சரிபார்த்தனர்.
20 மனித மண்டை ஓடுகள், பித்தளை விநாயகர் சிலை, மரத்தால் ஆன காளி சிலை, மண்டை ஓட்டில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எலும்பு துண்டுகள், 10 வசிய மை டப்பாக்கள், 7 வசியப்பொடி டப்பாக்கள், இளம்பெண்ணின் உடலை அடைத்து வைத்திருந்த மரத்தால் ஆன சவப்பெட்டி, இளம்பெண்ணின் உடலை சுற்றி வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் கவர்-துணிகள், தாமிர தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த சொகுசு கார் ஆகியவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாந்திரீகத்திற்காக கார்த்திகேயன் பயன்படுத்திய மண்டை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை எங்கிருந்து அவர் பெற்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் போலீசார் கோர்ட்டில் விளக்கம் அளித்தனர்.

0 comments:

Post a Comment