Tuesday 16 December 2014



பெஷாவர்,:பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பள்ளி புகுந்து நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர்.

ராணுவம் அதிரடி தாக்குதல்

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது.

இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு சர்வதேச நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்தன. இந்நிலையில் தீவிரவாதிகள் கராச்சி விமானநிலையத்தில் பெரும் தாக்குதல் நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர். இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் போர் விமானங்கள், தலீபான் முகாம்களை குறி வைத்து தாக்குதல்கள் தொடுத்து வருகிறது. அமெரிக்காவும் தாக்குதல் நடத்திவருகிறது.

இதுவரையில் 2000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்குள் தீவிரவாதிகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட படித்து வருகின்றனர். இன்று பள்ளி வழக்கமாக செயல்பட்டபோது, ராணுவ உடையில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். தீவிரவாதிகள் பள்ளிக்குள் புகுந்தது தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் பள்ளியை சுற்றி வளைத்தனர். பள்ளிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரியவந்ததும் பள்ளியை சூழ்ந்தனர்.

சரமாரியாக துப்பாக்கி சூடு

உள்ளே புகுந்த தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகள் என்றும் பார்க்காமல் உள்ளே சிக்கியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். பள்ளியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதும், தீவிரவாதிகளை நோக்கி ராணுவமும் தாக்குதல் நடத்தியது.


ராணுவம் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகளை சுட்ட வண்ணமே இருந்தனர். இதற்கிடையே ஒருபகுதியாக உள்ளே சென்ற ராணுவம், காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்லும் பரிதாப சம்பவம் நிகழ்ந்து கொண்டுள்ளது. பெற்றோர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். ராணுவம் உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

104 பேர் உயிரிழப்பு

கொடூர குணம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர் என்று மாகாண முதல்-மந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்த குழந்தைகள் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த குழந்தைகளில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளியின் ஆசிரியர்களும் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

 பள்ளிக்குள் புகுந்து 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மீதிஉள்ள தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளும் முயற்சியில் ராணுவம் இறங்கியுள்ளது.


இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கம் பெறுப்பேற்றுள்ளது. தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் மெத்தனமாக கூறியுள்ளது. இச்சம்பவம் உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவாஸ் செரீப் கண்டனம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நவாஸ் செரீப் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இதற்கிடையே சம்பவம் நடந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நான் பெஷாவர் செல்ல முடிவு செய்துள்ளேன். அங்கு ராணுவம் தரப்பில் நடத்தப்படும் நடவடிக்கையை ஆய்வு செய்ய உள்ளேன். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் என்னுடையவர்கள், இது எனக்கு இழப்பு என்று பிரதமர் நவாஸ் செரீப் கூறியுள்ளார்.

தலிபான் அடாவடி

குழந்தைகளை சுட்டுக் கொலை செய்த கொலைக்கார தலிபான் தீவிரவாத இயக்கம் ராணுவத்திற்கு எங்களது வலியை உணரச் செய்யவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம் என்று அடாவடியாக தெரிவித்துள்ளது.

தலிபான் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவம் எங்களது குடும்பத்தை குறிவைத்ததால் நாங்கள் பள்ளியை குறிவைத்தோம். அவர்கள் எங்களுடையை வலியை உணர விரும்பினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

-தினத்தந்தி.

0 comments:

Post a Comment