Wednesday 5 November 2014


ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார்.
கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பெண்கள் கலந்து கொள்ள கூடாது
இது குறித்து ஈரான் போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஈரானில் ஆண்கள் விளையாட்டு போட்டி களில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது.
பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறி நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டியது பெண்களின் கடமை" என்று கூறினார்.
ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளன. இதனால் விதிகளை மீறி நடந்ததாக கான்ச்சே மீது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து கான்ச்சேவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கான்ச்சே சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கான்ச்சே கவாமியின் கைதை எதிர்த்து ஈரானில் பிரிட்டன்வாசிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கான்ச்சே கவாமிக்கு ஆதரவாக இணையதளத்தின் மூலம் சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களை திரட்டி அவரை விடுதலை செய்ய போராடி வருகின்றனர்.
இதற்கு சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. 

-தி இந்து.

0 comments:

Post a Comment