Saturday 22 November 2014

எறையூரில் பிடிபட்ட மலைப்பாம்புடன் வன அலுவலர்கள்- படம் :வசந்த ஜீவா.
எறையூர்  அருகே 6 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி பீட் பகுதியில், எறையூர் காலனி அருகேயுள்ள காப்புக்காட்டில் நேற்று இரையை தின்றுவிட்டு நகர முடியாமல் திணறிக்கொண்டிருந்த மலைப்பாம்பு ஒன்றை சிலர் பார்த்தனர். அதுபற்றி பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அகமதுவுக்குத் தகவல் தெரிவித்தனர். கலெக்டர் மூலம் மாவட்ட வன அலுவலர் ஏழுமலைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வன அலுவலர் ஏழுமலை உத்தரவின்பேரில், வனவர் வீராசாமி, வனக்காப்பாளர் திருநாவுக்கரசு, வனக்காவலர் சந்திரசேகர் ஆகியோருடன் மலைப்பாம்பினைப் பிடிக்கும் குழு எறையூருக்கு விரைந்தது.
அங்கு அந்த குழுவினர் மலைப்பாம்பைப் பிடித்து சாக்குப்பையில் போட்டு பெரம்பலூர் மாவட்ட வன அலுவலகத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் சிறுவாச்சூர் அருகே பச்சைமலையிலுள்ள அடர்வனத்திற்குக் கொண்டு சென்று மலைப்பாம்பு விடப்பட்டது. பிடிபட்ட அந்த மலைப்பாம்பு 6 அடி நீளமுடையதாகும்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் ஏழுமலை தெரிவித்ததாவது : தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்புச்சட்டம் 1972ன்படி மலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாகும். அதனைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும். மலைப்பாம்பு இருப்பது கண்டறியப்பட்டால் வனத்துறையினரிடமோ, தீய ணைப்பு துறையினரிடமோ உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.



0 comments:

Post a Comment