Thursday 25 September 2014


சிவகங்கை: மானாமதுரை மாணவர் ஒருவர், வறுமையால் சுடுகாட்டில் பிணம் எரித்து கல்லூரி படிப்பை தொடர்கிறார்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் வசிப்பவர்கள் முருகேசன்,- பஞ்வர்ணம். இத் தம்பதிக்கு ஆனந்தன், மணிகண்ட ன், சங்கர் , பரிமளா, ராக்கம்மாள் என, 5 குழந்தைகள். முருகேசனுக்கு சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழில். இதில், கிடைக்கும் வருமானத்தில் இவர், 2 மகன், ஒரு மகளை கரையேற்றினார். ஒரு மகள் இறந்துவிட்டார். இருமகன்கள், மகள் தனித்தனி குடும்பமாக வசிக்கின்றனர். திருமணமாகாத மகன் சங்கருடன் முருகேசன், பஞ்சவர்ணம் வசிக்கின்றனர்.பள்ளிப்படிப்பை முடித்த சங்கருக்கு கல்லூரி எட்டாத இடமாக இருந்தது. வெளியூர் சென்று படிக்க வசதியில்லை, 'வெட்டியான்' தொழிலிலும் வருமானம் குறைவு. வறுமை துரத்தினாலும், தன்னம்பிக்கை இழக்காத சங்கர், தந்தைக்கு உதவியாக சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலுக்கு சென்றார்.கிடைக்கும் வருமானத்தில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பி.எஸ்.சி.,(வேதியியல்) படித்து முடித்து, எம்.எஸ்.சி,க்கு உயர்ந்தார். அவரது தொழிலை பிறர் ஏளனமாக பேசினாலும், 'செய்யும் தொழில் தெய்வம்' என அவர் கூறியது தன்னம்பிக்கையை காட்டுகிறது.

அவரை சந்தித்தபோது கூறியதாவது:சாதாரண குடிசை வீட்டில் வசிக்கிறோம். தந்தையின் சொற்ப வருமானத்தில் சகோதரர், சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். அவரவர் குடும்பத்தை ஓட்டுவதே கஷ்டம். எனது உயர் படிப்பு கனவு நிறை வேறுமா என்ற அச்சம் இருந்தது. எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்தது. தந்தையுடன் சுடுகாட்டில் பிணம் எரிக்க சென்றேன். இரு நபர்கள் என்றால் சில நேரத்தில் கூடுதல் பணம் கிடைக்கும். திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நானே பிணம் எரிப்பேன். பிணம் எரிந்து கொண்டிருக்கும் போது, அதன் வெளிச்சத்திலும் படித்துள்ளேன். பி.எஸ்.சி., முடித்த பின், அரசு வேலை கிடைக்கும் என நம்பினேன். கிடைக்காததால் எம்.எஸ்.சி.,யில் சேர்ந்தேன். படிப்பு செலவு, குடும்ப செலவு என, வருமானம் போதவில்லை. நேரம் கிடைக்கும்போது, மானமாமதுரை ரயில்வே ஸ்டேஷன் கேன்டீன் மூலம் ரயில் வரும்போது, பிளாட்பாரத்தில் டீ, காபி விற்பேன். டான்ஸ் கற்றுக்கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செல்கிறேன். ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவரை குருவாக கருதுகிறேன். அவர் என்னை ஒரு ஓவியனாக மாற்றினார். தற்போது, ஓவியனாகவும் வலம் வருகிறேன். பல்வேறு போட்டியில் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளேன். ஓவியத்தில் 'சுடர்மணி' விருது பெற்றுள்ளேன். வெட்டியான், டான்சர், ஓவியன் என, மும்முனையில் வறுமையை வென்று படிப்பை முடிக்க வேண்டும். அரசு வேலையில் சேர்ந்து எனது குடிசையை மாற்ற வேண்டும். 'வெட்டியான்' கள் நல வாரியத்தில் பெற்றோர் உறுப்பினர்களாக இருந்தும், அரசு வேலைக்கான வாய்ப்பு, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. எனது சுய தொழில் மீது நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் உயர்வேன், என்றார்.

-தினமலர்.

0 comments:

Post a Comment