Monday 29 September 2014


தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 கண்ணீர் மல்க பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
கண்ணீர் மல்க பதவியேற்பு
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர். 

 
பதவியேற்பின்போது கண்ணீர்விட்ட அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தபோதே தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவராகத் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார் பா.வளர்மதி.
அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். பா.வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார். 



கண்ணீருடன் பதவியேற்ற வளர்மதி, கோகுல இந்திரா. | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
2-வது முறையாக முதல்வரானார்:
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.
அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
முதல்வர் பொறுப்பேற்றார்:
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சந்தித்தார்.
பெங்களூர் விரைவு:
தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் மாலை 4.45 மணிக்கு பெங்களூர் விரைந்தார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் விரைந்தனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. 

-தி இந்து.

0 comments:

Post a Comment